மதுரை திருவிக மாநகராட்சி பள்ளியில் 195 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

Published Date: August 12, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்தாஸ் புரம் திருவிக மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேற்று விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மேயர் இந்திராணி பொன் வசந்த், கமிஷனர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை வகித்து 195 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் இரு கண்களாக கல்வியும், சுகாதாரமும் உள்ளது. மத்திய சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளில் மாநகராட்சி பள்ளிகளுக்காக பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் செய்து பள்ளி உட்கட்டமைப்பை சிறப்பிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு மத்திய தொகுதி சார்ந்த நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை பொறுப்பான முறையில் பள்ளிகளின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெரும்பாலானோர் நாடிவரும் அரசு பள்ளிகளில் உயர் தரம் வாய்ந்த கல்வியை பெரும் வகையில் முதலமைச்சரின் ஆதரவுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது இவ்வாறு பேசினார். 

பின்னர் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி, கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் நாகேந்திரன், மக்கள் தொடர்பாளர் மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Media: Dinakaran